Sunday, 14 May 2017

‘பெல்லி சூப்புலு’ ஹீரோவுடன் டூயட் ஆடப் போகிறாரா சமந்தா?

டோலிவுட்டில் ‘பெல்லி சூப்புலு’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் தேவரகொண்டா நடித்து சமீபத்தில் ரிலீஸான படம் ஸ்ரீநிவாச ரவிந்திராவின் ‘துவாரகா’. தற்போது, இயக்குநர் சந்தீப் ரெட்டியின் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் செம பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர கைவசம் அறிமுக இயக்குநர் பாரத் கம்மா படம், ‘ஸ்ரீரஸ்து சுபமஸ்து’ படப் புகழ் பரசுராமின் புதிய படம் ஆகியவை உள்ளது. இதனையடுத்து மற்றுமொரு புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.


சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும், ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கிலும் உருவாகவுள்ளது. இதில் சாவித்ரியின் கேரக்டரில் கீர்த்தி சுரேஷும், சமந்தா ரிப்போர்டராகவும், துல்கர் சல்மான் ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் வேடத்திலும் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், விஜய் தேவரகொண்டா சமந்தாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக டோலிவுட், கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டு வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, ‘காதல் மன்னன்’ வேடத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டாவிடம் பேச்சு வார்த்தை நடந்தது. பின், சில காரணங்களால் துல்கர் அந்த இடத்தை கைப்பற்றி விட்டாராம். ‘வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘ஸ்வப்ன சினிமா’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதனை நாக் அஷ்வின் இயக்கவுள்ளார். நாக் அஷ்வினின் ‘எவடே சுப்ரமண்யம்’ படத்திலும் விஜய் தேவரகொண்டா முக்கிய வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ‘நடிகையர் திலகம்’ படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.

No comments:

Post a Comment